எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகம் முழுக்க ஊர் ஊராகச் சென்று , குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி மகிழ்விக்கும் "கதைச்சொல்லி" வனிதாமணி.

Friday, March 30, 2018


கணவரின் பிசினஸூக்கு உதவியாக இருந்தவளைக் கதைச்சொல்லியாக மாற்றியது என் இரண்டாவது குழந்தைதான்" எனப் புன்னகையுடன் ஆரம்பிக்கிறார், வனிதாமணி. ஈரோட்டைச் சேர்ந்த இவர், குழந்தைகளுக்கான கதைச்சொல்லி. தமிழகம் முழுக்க ஊர் ஊராகச் சென்று, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி மகிழ்விக்கிறார்.

கதைப் புத்தகங்கள் படிப்பது என் 20 வருடப் பழக்கம். யோகா மீதும் ஆர்வம். அதைக் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்தும் வருகிறேன். எங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததும், தினமும் கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். எனக்குத் தோன்றிய புதுப் புதுக் கதைகளை நீட்டி, முழக்கிச் சொல்வேன். அந்தக் கதைகளைக் குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பமே ஆவலாக இருக்கும். அதுவே, எனக்கு உத்வேகமாக அமைந்தது. புத்தகங்களில் படித்த கதைகளைச் சற்று மாற்றிச் சொன்னேன். பிறகு, ஈரோடு அரசு நூலகத்துக்குச் சென்று குழந்தைகளுக்குக் கதைகள் சொல்ல நினைத்தேன். என் யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றார் நூலகர். அதற்கான ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்துகொடுத்தார். அங்கே வாரந்தோறும் கதைகள் சொன்னேன். பல குழந்தைகளையும் கதைகள் சொல்ல வைத்தேன். அவர்களின் கதைகள் எனக்குப் புதிய விஷயங்களைக் கற்றுத்தந்தன. பிறகு, வீட்டிலேயே `பட்டாம்பூச்சி' எனும் பெயரில் நூலகம் அமைத்தேன். என்னிடமிருந்த புத்தகங்கள், நண்பர்கள் செய்த உதவியோடு தற்போது இரண்டாயிரம் புத்தகங்கள் உள்ளன. இதில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆயிரத்துக்கும் மேல். முக்கியமாக, அவற்றில் 90 சதவிகிதம் தமிழ்ப் புத்தகங்களே'' என்கிறபோது குரலில் பெருமிதம்.



பட்டாம்பூச்சி நூலகத்தில் வாரந்தோறும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் கதைகள் சொல்கிறேன். சராசரியாக 30 குழந்தைகள் வருகின்றனர். ஒரு வாரத்தில் வந்த குழந்தைகளில் சிலர் அடுத்த வாரம் வர மாட்டார்கள். அவர்களுக்குப் பதில் புதிய குழந்தைகள் வந்துவிடுவர். இவர்களை ஒருங்கிணைக்க, வாட்ஸ் அப் குழு ஒன்று உள்ளது. ஃபேஸ்புக்கில் எனது பதிவுகளைப் பார்த்தும், சிலர் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். கதை கேட்க வரும் குழந்தைகளை ஈர்ப்பதற்காக, சில டெக்கரேஷன்களைச் செய்துள்ளேன். ஆரம்பத்தில் கூச்சப்பட்ட குழந்தைகளும் இப்போதெல்லாம் தயக்கமின்றி கதைகள் சொல்கிறார்கள். எங்கள் பகுதியில் இருக்கும் இரண்டு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று கதைகள் சொல்லவைக்கிறேன். தேர்வு நேரம் என்பதால் தற்போது சிறிய இடைவெளி விட்டுள்ளேன். அடுத்த கல்வியாண்டில் கதை கேட்பதிலிருந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்துக்கு மாற்றும் திட்டம் உள்ளது'' என்கிற வனிதாமணி, நான்கு சுவர்களையும் தாண்டி விரிகிறது.

 ``பட்டாம்பூச்சி நூலகத்துக்கு வரும் குழந்தைகளுடன் காட்டுக்குள் ஒரு டிரிப் சென்றோம். எங்களோடு சூழலியலாளர் கோவை சதாசிவமும் வழிகாட்டியாக வந்திருந்தார். ஒரு நதி பிறக்கும் இடத்தையும் பறவைகளின் வகைகள் பற்றியும் மிக விரிவாகக் கூறியபோது, எங்கள் குழந்தைகளுக்குப் புதிய தகவல்களாக இருந்தன. அப்படி ஆர்வத்தில் ஆரம்பித்த எங்களின் கதைப் பயணம் 25-வது வாரத்தைத் தொடுகிறது. கதை சொல்வதோடு மட்டுமன்றி, குழந்தைகளுக்காக இயங்கும் மற்ற கலைஞர்களையும் அழைத்து வருகிறேன். ஒரிகாமி, களிமண் சிற்பம் செய்தல் போன்ற பயிற்சிகளை அவர்கள் வழியே அளிக்கிறேன். நண்பர்கள் அழைப்பின் பேரில் திருப்பூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குக் கதை சொல்லவும் எழுதவும் பயிற்சி அளிக்கச் சென்றுள்ளேன். நான் சொல்லிக்கொடுப்பதைவிட குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

இந்தப் பயணத்தில் நெகிழ்ச்சியான அனுபவங்கள் பல உண்டு. அவற்றில் இரண்டு முக்கியமானவை. கதை நிகழ்வு முடிந்த அடுத்த நாள், இரவு ஒன்பதரை மணிக்கு ஒரு குழந்தையின் பெற்றோரிடமிருந்து போன் வந்தது. அவர் பேசிக்கொண்டிருக்கையில் இடையில் போனை வாங்கிய குழந்தை `வனி அத்தை. இப்பவே எனக்கு ஒரு கதை சொல்லுங்க' என்றது. கதை சொல்லும் நூலகத்திலேயே இருக்கவும் ஆசையாக இருப்பதாகச் சொன்னது. இரண்டாவது நிகழ்வு... தங்கள் குழந்தையை அழைத்துவந்த ஒரு பெற்றோர், ``எங்க பையன் ரொம்பக் குறும்பு பண்ணுவான். ஓரிடத்துல உட்கார மாட்டான். ஒரு நிமிஷத்துக்கு மேலே எதையும் கவனிக்க மாட்டான்' என்றார்கள். அவனும் முதல் வாரத்தில் அம்மாவின் மடியைவிட்டு இறங்கவேயில்லை. அடுத்த வாரத்தில் என் அருகில் வந்து உட்கார்ந்தான். அடுத்தடுத்த வாரங்களில் என் மடியில் அமர்ந்து கதைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டான். நிகழ்வு முடிந்து நாங்கள் எல்லாம் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்க, அவனோ நூலகத்தில் இறைந்துகிடக்கும் புத்தகங்களை அடுக்கிவைப்பதில் ஈடுபாட்டுடன் இருந்தான். இந்த மாற்றம் அவன் பெற்றோருக்கு மட்டுமன்றி, அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. மற்றவர்கள் சொல்வதை கூர்ந்து கேட்பதே அடிப்படை பண்பு. இதை, கதைகள் கற்றுக்கொடுக்கிறது. புதிய கதைகளைச் சொல்லி, புதிய கதைகளைக் கேட்டு என் பயணம் முடிவற்று நீள வேண்டும் என்பதுதான் ஆசை" எனப் பெருங்கனவோடு முடிக்கிறார் வனிதாமணி.

2 comments

  1. ஆசிரியர்களான எங்களுக்கு கதைசொல்லியின் whatsup no.தேவை

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One