எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நீட்: வெளிமாநிலங்களில் பரிதவிக்கும் தமிழக மாணவர்கள்; தேர்வைப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை

Sunday, May 6, 2018


வெளிமாநிலங்களில்நீட் தேர்வெழுத சென்றுள்ள தமிழக மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி பரிதவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏற்படும் மனஉளச்சல் தேர்வைப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் நீட் தேர்வை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 7,288 மாணவர்கள் தேர்வுக்கான பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த தமிழக மாணவர்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கேரளம், ஆந்திரம், கர்நாடகம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாநிலத்துக்குள் தேர்வு மையங்களை ஒதுக்க உத்தரவிட்டது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்வுக்கூடங்களை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 தொற்றிய பதற்றம்: இதனால் தமிழகத்துக்குள் தேர்வுக்கூடம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவர்கள் மத்தியில் பதற்றம் நிலவத் தொடங்கியது. பொருளாதார ரீதியாக பல மாணவர்களால் வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறு அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தனிநபர் என பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் சார்பில் இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டும், செல்வோருக்கு ரூ.1000 நிதியுதவியும் அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
 வெளி மாநிலத்தில் பிரச்னைகள்: இந்நிலையில் வெளிமாநிலத்துக்குச் சென்றுள்ள மாணவர்கள் அங்கு பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். கேரள மாநிலத்துக்கு தேர்வெழுதச் சென்ற மாணவர்கள் சிலர் கூறியது: சில தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் தங்கியிருக்கிறோம். தேர்வெழுதும் மையங்கள் அதிக தூரத்தில் உள்ளன. உதாரணமாக, எர்ணாகுளத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் தேர்வு மையம் அமைந்துள்ளது. தேர்வு மையங்களுக்கு காலை 7.30 மணிக்குச் செல்ல வேண்டுமென்றால், அதிகாலை 4 மணிக்கே கிளம்பிச் செல்ல வேண்டும். இதனால் அதிக களைப்பு ஏற்படும். மொழி தெரியாத இடத்தில் தேர்வு மையங்கள் இருக்கும் இடங்களை விசாரித்துச் செல்வதிலும் சிக்கல் உள்ளது என்று தெரிவித்தனர்.
 திருநெல்வேலியில் இருந்து மாணவர்களை கேரளத்துக்கு அழைத்துச் சென்றுள்ள வழக்கறிஞர் காளிமுத்து மயிலவன் கூறுகையில், வேறு மாநிலங்களில் தேர்வெழுதுவதால் வினாத்தாள் எந்த மொழியில் இருக்கும் என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு நன்றாக தயார்படுத்திய மாணவர்கள் கூட பதற்றமான மனநிலையிலேயே இருக்கின்றனர். கிராமப்புறங்களில் இருந்து தேர்வெழுத வந்துள்ள மாணவர்களும் அவர்கள் உடன் வந்த பெற்றோருக்கும் இதுபோன்ற அனுபவம் இல்லாததால் அவர்கள் பிறரைக் காட்டிலும் மிரட்சியுடனே காணப்படுகின்றனர் என்றார் அவர்.
 தேர்வைப் பாதிக்கும்: இது போன்ற பிரச்னைகள் மாணவர்களின் தேர்வைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மனநல மருத்துவர் டாக்டர் ஆனந்த் கூறுகையில், வெளிமாநிலங்களில் உள்ள கால நிலை, உணவு, தண்ணீர் உள்ளிட்டவை மாணவர்களின் உடல் நலனைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பயணம், தங்குமிடம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பதற்றத்தால் மாணவர்களால் படித்ததை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க முடியாத நிலை ஏற்படலாம். இது நிச்சயம் தேர்வு முடிவைப் பாதிக்கும் என்று தெரிவித்தார்.
 உளவியல் தாக்குதல்: தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ள இந்த நவீன காலத்தில் தேர்வு மையங்களை அதிகரிக்க முடியாது என்ற சிபிஎஸ்இயின் விளக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.
 இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வெளிமாநிலத்துக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே பதற்றம் ஆரம்பித்திருக்கும். இதனால் அமைதியான மன நிலையில் மாணவர்களால் தேர்வுக்குத் தயாராக முடியாது. இது தேர்வை எதிர்கொள்வதில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இது தமிழக மாணவர்கள் மீது திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் உளவியல் தாக்குதல். டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் மத்திய அரசால், போதுமான அளவு தேர்வுக்கூட மையங்களை அமைக்க முடியவில்லை என்பது நகைப்புக்குரியது என்றார்.
 விலக்கு ஒன்றே தீர்வு: நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தாமல், நீட் தேர்வு மையங்களை தமிழகத்துக்குள் ஒதுக்க வேண்டும் என்று நீட்டுக்கு ஆதரவாகப் போராடும் மனநிலைக்கு வரக்கூடாது என்பதும் கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One