எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் பணிவரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த கோரிக்கைகளுக்கு அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு

Monday, May 28, 2018

கடந்த 2012 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசு ஆணை
எண்.47 நாள்:02.03.2012-ன் படி மாணவர்கள் எண்ணிக்கை 500 க்கும் குறைவாக உள்ள 998 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு தலா ஒரு துப்புரவாளர் பணியிடம் வீதம் 998 துப்புரவாளர் பணியிடங்களும்,மாணவர்களின் எண்ணிக்கை  500 க்கும் மேலாக உள்ள 996 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 1005 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு என தலா ஒரு பணியிடம் வீதம் 2001 துப்புரவாளர் பணியிடங்களும் ஆக மொத்தம் (998+2001) 2999 துப்புரவாளர் பணியிடங்கள் ரூ.1300-3000+300 தர ஊதியம் என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டன.

இதே அரசு ஆணையின் படி 2001 பள்ளிகளுக்கு 2001 காவலர் பணியிடங்கள் ரூ.4800-10000+ரூ.1300 தர ஊதியம் என்ற காலமுறை ஊதியத்தில்  பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.ஆக மொத்தம் (2999+2001) 5000 பணியிடங்களுக்கு பணியாளர்களை 2012 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை நியமனம் செய்தது.

இப் பணியிடங்கள் தோற்றுவிக்கும் போதே துப்புரவாளர் பணியிடங்களை சிறப்பு காலமுறை ஊதியத்திலும்,காவலர் பணியிடங்களை காலமுறை ஊதியத்திலும் நியமித்ததால் இன்று துப்புரவு பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்படாமலும்,குறைந்த ஊதியத்திலும் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதே அரசாணையில் காவலர் பணியிடத்தில் காலமுறை ஊதியத்தில் பணியில் சேர்ந்த காவலர்கள் பணிவரன்முறை பெற்று,தற்போது பதிவு எழுத்தர்களாக பதவி உயர்வு பெற்று சுமார் மாதம் ரூ.19,000/- வரை ஊதியம் பெறுகின்றனர்.

2012 ல் பணியேற்ற நாள் முதல் துப்புரவு பணியாளர்கள் ரூ.3000/- மட்டுமே பெற்று வந்தவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக்குழு ஊதியம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் ரூ.5000/- மாத ஊதியமாக பெற்று வருகின்றனர்.

பள்ளியில் துப்புரவு பணி செய்வது மட்டுமல்லாமல் 11 வகை விலையில்லா நலத்திட்ட பொருட்கள் எடுத்து வருவது,தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலகம்/முதன்மைக் கல்வி அலுவலகம் என பள்ளிக்கல்வி அலுவலகங்களுக்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டிய கடிதங்கள் எடுத்துச் செல்வது என அலுவலக உதவியாளர் செய்ய வேண்டிய பணியையும்  கவனிக்கின்றனர்.

துப்புரவு பணி மட்டுமல்லாமல் உயர் அலுவலகங்களுக்கு  கடிதங்கள் எடுத்துச் செல்வது,பள்ளிக்கல்வித்துறையின் விலையில்லா நலத்திட்டப் பொருட்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வது என  அனைத்துப்  பணிகளையும் குறைந்த ஊதியத்தில் எந்தவொரு சுணக்கமில்லாமல் பணிபுரியும் இவர்களுக்கு கருணையுடன்  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

எனவே பள்ளிக்கல்வித்துறை 2012 ல் 47 அரசு ஆணை மூலம் நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்களை காலமுறை ஊதிய பணியாளர்களாக உத்தரவிட்டு  பணிவரன்முறைப்படுத்திட வேண்டும். அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வினையும் வழங்கிட வேண்டும் என்ற துப்புரவு பணியாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.

வருகின்ற 30.05.2018 அன்று தமிழக சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன்  அவர்களால் தாக்கல் செய்யப்படவுள்ளது.இதில் அரசாணை எண்.47 ன் படி 2012 -ம் ஆண்டிலிருந்து பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் பணிவரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த கோரிக்கைகளுக்கு  அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One