எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஓய்வூதியப் பலன்களை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை: மத்திய பி.எஃப். ஆணையர் வி.பி.ஜோய் தகவல்

Wednesday, May 9, 2018

வருங்கால வைப்பு நிதித் திட்ட உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய மத்திய பி.எஃப். ஆணையர் வி.பி.ஜோய். உடன், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி அலுவலர் கே.வி.சர்வேஸ்வரன்,

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய பி.எஃப். ஆணையர் வி.பி.ஜோய் தெரிவித்தார்.
வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் (பி.எஃப்.) உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய பி.எஃப். ஆணையர் வி.பி.ஜோய் பேசியதாவது:
வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் எவ்வளவு தொகை செலுத்தினாலும், ஓய்வூதியமாக கிடைக்கும் பலன் குறைவாக இருப்பதாகவும், அரசு இந்த ஓய்வூதிய பலன்களை உயர்த்தித் தர வேண்டும் என்றும் கூறுகின்றனர். உண்மையில், வருங்கால வைப்பு நிதித் திட்டம் என்பது எவ்வளவு நாள் பணியாற்றினோம் என்பதைப் பொருத்தது அல்ல; எவ்வளவு தொகை செலுத்தியுள்ளோம் என்பதைப் பொருத்தே பலன்கள் கிடைக்கும். எனவே, ஓய்வுக் கால பயன்கள் அதிகளவில் கிடைக்க அதிக அளவில் பங்களிப்பு செலுத்திட வேண்டும். அதேசமயம், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
மேலும், வருங்கால வைப்பு நிதித் திட்டம் என்பது ஒரு பணியாளர் பணியின்போது பலன் பெறுவதற்காக அல்ல; அவர் பணி செய்ய முடியாமல் உள்ள வயதான காலத்தில் பலன் பெறுவதற்காக வழங்கப்படுவதாகும். அவ்வாறு ஓய்வுக் காலத்தில் பணியாளர்களுக்கு உரிய பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால் பணியாளர், வேலை அளிக்கும் நிறுவனம், வருங்கால வைப்பு நிதித் திட்ட அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
தற்போது வருங்கால வைப்பு நிதித் திட்டம் முழு அளவில் டிஜிட்டல்மயமாகி விட்டது. இதனால், பணியாளர்கள் தங்களது கணக்கில் வருங்கால வைப்பு நிதி முறையாக செலுத்தப்பட்டுள்ளதை தங்களது செல்லிடப்பேசி வாயிலாகவே தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு அது முறையாகச் செலுத்தப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேசமயம், வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் நாடு முழுவதும் 1,550 நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதியை பணியாளர்களுக்கு முறையாக அளிக்கவில்லை என்றால், அந்த விலக்கு அனுமதியை ரத்து செய்துவிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சேர்க்கப்படும். வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் இணையதளப் பதிவில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக உறுப்பினர்கள் கூறுகின்றனர். அத்தகைய குறைகளைப் படிப்படியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். இக்கூட்டத்தில், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி அலுவலர் கே.வி.சர்வேஸ்வரன், வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதித் திட்ட ஆணையர் எஸ்.டி.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One